

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் மார்ச் 7-ம் தேதிக்குள் விடுதலை செய்யப்படுவார் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே 56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சஞ்சய் தத் 1996-ல் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதற்கு முன் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 2013, மார்ச் மாதம் உறுதி செய்தது.
சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் கழித்து விட்டதால் எஞ்சிய 42 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சஞ்சய் தத்தின் எஞ்சிய தண்டனைக் காலம் 2016, நவம்பர் வரை உள்ளது. என்றாலும் நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார், இதுகுறித்து சிறை அதிகாரி உரிய நேரத்தில் பரிசீலனை செய்வார் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியது.
இந்நிலையில் 2016, மார்ச் 7-ம் தேதிக்குள் சஞ்சய் தத், சிறையில் இருந்து விடுதலை செய்யப் படுவார் என்று மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.