Published : 11 Jun 2021 01:55 PM
Last Updated : 11 Jun 2021 01:55 PM

மிஷன் 2024?- சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பால் தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடலா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐபேக் நிறுவனத்தை 2014 வாக்கில் தொடங்கினார். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து அந்தக் கட்சிகளை வெற்றி பெறச் செய்வது ஐபேக் நிறுவனத்தின் பணி.

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோருக்காகத் தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், அவர்களை வெற்றியும் பெறச் செய்தார்.

2021 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசிய அவர், ''தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. நான் கூறியபடியே வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை.

இருந்தாலும் நான் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போகிறேன். 9 ஆண்டுகள் இந்தப் பணியைச் செய்துவிட்டேன். போதும், இனிமேல் நான் எனது குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடுகிறேன். எனது ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடலா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சந்திப்பு பவாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதுபற்றிப் பிரசாந்த் கிஷோர் தரப்பில் கூறும்போது, ''மேற்கு வங்கம் மற்றும் தமிழகத் தேர்தலில் மம்தா மற்றும் ஸ்டாலினுகு ஆதரவுக் கரம் நீட்டிய ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது'' என்று தெரிவித்தனர்.

எனினும் இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறும்போது, ''2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். வலிமையான எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x