

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும், தொற்று குறைவான பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 3 முறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. எனினும், 11 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மூத்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து, கர்நாடகாவில் வரும் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ''தொற்று குறைவான பகுதிகளில் தளர்வு அளிக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு இப்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்'' என்று அறிவித்துள்ளார்.
15 சதவீதத்துக்கும் குறைவாகத் தொற்று விகிதம் உள்ள மாவட்டங்களில், 50 சதவீத ஊழியர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம். பின்னலாடைத் தொழிலைப் பொறுத்தவரையில் 30 சதவீத ஊழியர்கள் இயங்கலாம். அதேபோலக் கட்டுமானத் தொழிலும் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காலை 5 மணி முதல் 10 மணி வரை பூங்காக்கள் இயங்கலாம். அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.
எனினும் சிக்மங்களூரு, சிவமோகா, தேவநாகரி, மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், தட்சிணா கன்னடம், கிராமப்புற பெங்களூரு, மாண்டியா, பெலகாவி மற்றும் குடகு ஆகிய 11 மாவட்டங்களில் ஊரடங்கு பழைய கட்டுப்பாடுகளுடன் தொடரும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.