

உத்தரப் பிரதேசத்தில் கோயில் விளைபொருளை விற்கச் சென்றவரிடம் கடவுளின் ஆதார் அட்டை தரும்படி அரசின் சந்தையினர் கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கோயில் பணியாளர்கள், அப்பொருட்களை விற்க முடியாமல் திரும்பியுள்ளனர்.
உ.பி.யின் புந்தேல்கண்ட் பகுதியிலுள்ள பல்வேறு மாவட்டங்களின் கோயிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் நெல், கோதுமை, கடுகு, எள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விளைகின்றன. பாந்தா மாவட்டத்தின் அட்டரா தாலுக்காவின் குர்ஹர்ரா கிராமத்தில் ராம்- ஜானகி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான ஏழு ஹெக்டேர் நிலத்தில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன.
இத்தனை நாட்களாக அவை பிரச்சினையின்றி விற்பனையாகி வந்தன. வழக்கம்போல், இந்த வருடம் விளைந்த 100 குவிண்டால் கோதுமையைக் கடந்த வாரம் விற்பனை செய்ய கோயில் பணியாளர்கள் சந்தைக்கு எடுத்துச் சென்றனர். அவர்களிடம் சந்தையில் பதிவு செய்ய கடவுளுக்கான ஆதார் அட்டை கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்தவர்கள் கோதுமையை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களின்படி சந்தைகளில் விளைபொருட்களை விற்க பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இப்பதிவிற்காக ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே அரசு சந்தைகளில் விளைபொருட்களை விற்க முடியும் என மத்திய அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் ராம்- ஜானகி கோயிலின் அர்ச்சகரான ராம்குமார் தாஸ் கூறும்போது, ''இந்த வருடம் புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வந்ததால் விளைபொருளின் உரிமையாளர் ஆதார் அட்டையுடனான பதிவு அவசியம் என்றனர். எனவே, வேறு வழியின்றி இந்த கோதுமையை தரகர் மூலமாக இந்த வருடம் விற்க முடிவு செய்துள்ளோம். அடுத்த வருடத்திற்குள் அரசிடம் பேசி ஏதாவது வழி ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.
உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களின் விளைபொருட்கள் விற்பனையில் இந்தப் பிரச்சினை நிலவுகிறது. இதைத் தவிர்க்க கோயில் மற்றும் மடங்களின் நிலங்களைக் கடவுள்கள் மற்றும் மறைந்த துறவிகளின் பெயர்களுக்கு பதிலாக அறக்கட்டளைகளின் சொத்தாக மாற்றிப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.