

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அரிஞ்சய் ஜெயின், பேசிய குரல் பதிவு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அந்த பதிவில், “எங்கள் மருத்துவமனையில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவ ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் யாரெல்லாம் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள (ஏப்ரல் 26-ல்) ஒரு சோதனை நடத்தப்பட்டது. இதன்படி நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்” என அவர் கூறியிருந்தார். இந்த குரல் பதிவுகடந்த சில தினங்களுக்கு முன்புசமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சோதனையின்போது 22 நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதையடுத்து, டாக்டர் அரிஞ்சய் ஜெயின் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் பெருந்தொற்று சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் அரசு உத்தரவை மதிக்காதது (188) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆக்ரா சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் அந்த மருத்துவமனைக்கு நேரில்சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவந்த 55 நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றினர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள், நோயாளிகள் பதிவேடு மற்றும் இதர ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பிறகு அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.