

பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் 11 ஆண்டுகள் இளைஞர் வாழ்க்கை நடத்தியது தெரியவந்துள்ளது.
கேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள அயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மாயமானார். அவரதுகுடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவைகண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய சஜிதா, தனது வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது காதலன் ரஹ்மான் (34) வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்ந்து வந்தார். இது ரஹ்மானின் குடும்பத்தினருக்கு தெரியாது. வீட்டில் தன்னுடைய அறை யில் காதலியோடு வாழ்ந்து வந்த அவர், வீட்டில் தனக்கு வரண் பார்க்கத் தொடங்கியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார்.
ரஹ்மான் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் நென்மாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனிடையே ரஹ்மானின் சகோதரர் பஷீர், ஒரு பெண்ணோடு ரஹ்மான் வீடு எடுத்து வாழ்ந்து வருவதை பார்த்தார். காவலர்கள் நேரில் போய் விசாரித்து ரஹ்மானையும், அவரோடு வாழ்ந்து வந்த சஜிதாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போதுதான் இருவரும் 11 ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. சஜிதாவும் அவரோடு வாழ விரும்பியதால் தம்பதியை சேர்ந்து வாழச் சொல்லி நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் நென்மாரா காவல் நிலைய அதிகாரி தீபாகுமார் கூறியதாவது:
ரஹ்மானும், சஜிதாவும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் தங்கள் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்திருக்கிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வந்த சஜிதாவை தனது அறையில் தங்க வைத்துள்ளார் ரஹ்மான். அவர் வெளியே செல்லும்போது தனது அறையைப் பூட்டி சாவியைக் கையோடு எடுத்துச் சென்றுவிடுவார். அதேநேரம் ரஹ்மான் தன்வீட்டின் ஜன்னல் கம்பிகளை கழட்டி மாட்டும்படி அமைத்திருக்கிறார். இரவு நேரங்களில் அவரது மனைவி ஜன்னல் கம்பிகளின் வழியே வெளியே வந்திருக்கிறார்.
ரஹ்மான் வீட்டில் அனைவரோடும் சேர்ந்து சாப்பிடாமல் எப்போதும் தனது அறைக்கு சென்று சாப்பிட்டிருக்கிறார். தனக்கு கொடுத்த உணவையே காதலி சஜிதாவுக்கும் பங்கு வைத்திருக்கிறார்.
இதன்மூலம் சஜிதா மாயமான வழக்கும், ரஹ்மான் மாயமான வழக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஹ்மான் கூறும்போது, "நான் அறையின் வெளியே எலக்ட்ரானிக் பூட்டு போட்டுபூட்டியிருந்தேன். அதை என்னால் மட்டுமே திறக்க முடியும். அறை கதவில் மின்சாரத்தையும் பாய்ச்சியிருந்தேன். இதனால் தொட்டால் ஷாக்கடிக்கும் என்பதால் யாரும் தொடமாட்டார்கள். அறையில் டிவி வைத்திருந்தாலும் சப்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஹெட் போன் வைத்துக் கொடுத்திருந்தேன்’’ என்றார்.