

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு வரிச் சலுகை அளிப்பது தொடர்பாக நாளை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த மே 28-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பிபிஇ கிட், முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தொடர்பான பரிந்துரையை மத்திய அமைச்சரவை குழு ஜூன் 7-ம் தேதி தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நாளை (12-ம் தேதி) நடக்கிறது. இதில், கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு வரிச் சலுகை அளிப்பது குறித்து் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா நோயாளிகள் பயனடையும் விதமாக மருந்துகள் மற்றும் பிற சாதனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படலாம் என்று உத்தரப் பிரதேச நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினருமான சுரேஷ் குமார் கண்ணா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘வரியை எவ்வளவு குறைப்பது என்பதை ஜிஎஸ்டி கவுன்சில்தான் தீர்மானிக்கும். மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், ஆக்சிஜன் தெரபி சாதனங்கள், செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், என்-95 முகக் கவசம், உடலின் உஷ்ணத்தை அறியும் சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் வரிச் சலுகை அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது’’ என தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டி களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.