Last Updated : 11 Jun, 2021 03:12 AM

 

Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக 'மேஜர் சர்ஜரி' தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேட்டி

காங்கிரஸ் கட்சி உத்வேகமாக செயல்பட உடனடியாக அதற்கு 'மேஜர் சர்ஜரி' (அறுவை சிகிச்சை) செய்யப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் க‌ட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின்னர், காங்கிரஸ் சுணங்கி போய் இருக்கிறது. தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்தாலும், பாஜகவை எதிர்க்கொள்ளும் வகையில் வலிமையான தலைமை இல்லாததால், அமைப்பு ரீதியாக கட்சி சோர்வடைந்து இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு போட்டிக்கு உடனடியாக மேஜர் சர்ஜரி செய்யப்பட வேண்டும். இந்த மேஜர் சர்ஜரியை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், அடுத்த ஆண்டு 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது. இந்த 7 மாநில தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெறாவிட்டால், மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 7 மாநில தேர்தலை வெல்ல புதிய தலைவர் படையை அமைக்க வேண்டும்.

காங்கிரஸுக்கு புது ரத்தம் பாய்ச்சம் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த சூழலில் கொள்கையில் உறுதியோடு இருப்பவர்களுக்கு கட்சி மேலிடம் முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பார்த்து வாய்ப்பு வழங்கினால் மீண்டும் கட்சிக்கு பாதிப்பே ஏற்படும்.

ஜிதின் பிரசாத் தனிப்பட்ட தேவைகளுக்காகவே பாஜகவில் இணைந்திருக்கிறார். அவர் கொள்கை உறுதி அற்றவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பொறுப்பாளராக இருந்த மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத போதே, அவர் அரசியலில் தோற்றுவிட்டார். தகுதியற்றவர்கள் ஒருப்போதும் ம‌க்கள் த‌லைவர் ஆக முடியாது.

காங்கிரஸில் பதவிகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, திறமையற்றவர்களை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும். கட்சியில் கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்கும், ஆக்ரோஷமாக செயல்படும் இளைஞர்களுக்கும் பதவி வழங்க வேண்டும். அர்ப்பணிப்பு, களப்பணி, அனுபவம் உள்ளவர்களை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. ஆங்கிலத்தில் பேசுவதாலே பதவி பெறும் நிலை தொடரக் கூடாது.

இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x