Published : 13 Dec 2015 01:03 PM
Last Updated : 13 Dec 2015 01:03 PM

பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமூச்சில் இறங்க கேஜ்ரிவால் திட்டம்: டெல்லி நிர்வாகத்தை துணை முதல்வர் சிசோடியா கவனிப்பார்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்காக முழுநேர பிரச்சாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஈடுபட உள்ளார். இவரது டெல்லி முதல்வர் பொறுப்புகளை துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில், பாரதிய ஜனதா ஆதரவுடன் சிரோமணி அகாலி தளம் ஆட்சி நடத்தி வருகிறது. இம்மாநிலத்தில் இன்னும் ஓராண்டில், அதாவது 2017 தொடக் கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் புதிதாக தொடங்கப்பட்டு ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பஞ்சாபில் 4 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தலைமை ஏற்றால் வெற்றி உறுதி என கட்சியினர் கருதுகின்றனர். இதற்காக கேஜ்ரி வால் தனது டெல்லி முதல்வர் பொறுப்பில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “பஞ்சாபின் முதல்வர் வேட்பாள ராக கேஜ்ரிவால் முன்னிறுத்தப் படவும் அதிக வாய்ப்புள்ளது. இங்கு ஏற்கெனவே எங்களிடம் தோல்வியுற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே முக்கிய எதிரிகளாக உள்ளன. ஒருவேளை கேஜ்ரிவால் இங்கு தோற்றாலும் அவர் டெல்லி முதல்வராக பதவியில் தொடருவார். கேஜ்ரிவாலுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரும் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர்” என்றார்.

கேஜ்ரிவால் தற்போது டெல்லி முதல்வராக இருப்பினும் எந்தத் துறையின் பொறுப்புகளும் அவரிடம் இல்லை. கல்வி, நிதி, திட்டம், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் துணை முதல்வரான சிசோடியாவிடமே உள்ளன. இதனால் பஞ்சாப் தேர்தலில் இறங்குவது கேஜ்ரிவாலுக்கு சிக்கலாக இருக்காது எனக் கருதப்படுகிறது.

எனினும், சீக்கியர்கள் பெரும் பான்மையாக வாழும் பஞ்சாபில் அந்த சமூகத்தவர் மட்டுமே தொடர்ந்து முதல்வராக இருந்து வருகின்றனர். அருகிலுள்ள ஹரி யாணாவை சேர்ந்த, சீக்கியர் அல்லாதவரான கேஜ்ரிவால், பஞ்சாபிகளால் ஏற்கப்படுவரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாபில் முதல் பிரச்சாரக் கூட்டத்தை வரும் ஜனவரி 14-ம் கேஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார். அப்போது அவர் பஞ்சாபின் ஒரு தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பஞ்சாபில் கேஜ்ரிவால் வெல்லும்படியான தொகுதியை கட்சியினர் தேடிவருவதாகவும் தெரிகிறது.

பஞ்சாபில் இம்முறை பாஜக-அகாலிதளம் கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை சார்பில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x