

டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் 200 கோடி கரோனா தடுப்பூசி இருக்கும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசத்தின் பாஜக அலுவலகத்தை காணொலி மூலம் இன்று திறந்துவைத்த ஜெ.பி.நட்டா, "கடந்த ஆண்டு கரோனா பரவல் முதல் அலையின்போது நம்மிட்டம் கரோனா பரிசோதனைக்கே ஒரே ஒரு சோதனைக் கூடம் தான் இருந்தது.
இன்று நாடு முழுவதும் 1500 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. அன்றாடம் 25 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிறோம். கரோனாவை எதிர்கொள்ள தேசம் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டுள்ள விதம் பாராட்டுக்குரியது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9446 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில், இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை. இன்று இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நிறுவனங்களாக இது அதிகரிக்கும். இந்தியாவில் டிசம்பர் 2021க்குள் 200 கோடி தடுப்பூசிகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம்:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் நட்டா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "2014ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்தபின்னர் தான் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவருடைய ஆக்ட் ஈஸ்ட் கொள்கையால் மாநிலத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.
பிரதமராகப் பதவியேற்றத்தில் மோடி 30 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
1985களில் அருணாச்சலில் பாஜகவுக்கு ஒரே ஒரு எம்எல்ஏ தான் இருந்தார். இன்று 48 எம்எல்ஏ.,க்களுடன் நாம் ஆட்சியமைத்துள்ளோம்" என்றார்.