Published : 12 Jun 2014 12:00 AM
Last Updated : 12 Jun 2014 12:00 AM

ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்- மத்திய அரசுக்கு முலாயம் சிங் எச்சரிக்கை

மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டதால், ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள் என்று மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் புதன்கிழமை பேசியதாவது: “மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள் என உங்களை எச்சரிக்கிறேன். இதற்கு முன்பு இதேபோன்ற வெற்றியை பெற்ற பல அரசுகளை நாங்கள் பார்த்துள்ளோம். அது இந்திரா காந்தியின் அரசாக இருக்கட்டும் அல்லது ராஜீவ் காந்தியின் அரசாக இருக்கட்டும், அவர்களை எதிர்த்து நாங்கள் போராடியுள்ளோம்.

இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவரசநிலை நெருக்கடி நிலையை நாங்கள் எதிர்த்துப் போராடியுள்ளோம். அதன் பின்பு 1977-ல் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு ஜனதா கட்சி வெற்றி பெற்றது. 1984-ல் ராஜீவ் காந்தி பெற்ற மகத்தான வெற்றியையும், 1989-ல் அவர் அடைந்த தோல்வியையும் நாங்கள் பார்த்துள்ளோம்.

பல்வேறு விவகாரங்களில் பெரிய அளவிலான வாக்குறுதியை நீங்கள் (பாஜக) அளித்துள்ளீர்கள். பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை மீட்போம் என்றெல்லாம் நீங்கள் வாக்குறுதி அளித்துள்ளீர்கள். அதை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்பதை தெரிவியுங்கள். உங்களை, இந்த விவகாரத்தில் நாங்கள் ஆதரிக்கிறோம்.

சமீபத்தில் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா? இருவரும் விவாதித்த விஷயங்களைப் பற்றி ரகசியமாக வைத்திருக்கப்போகிறீர்களா, அல்லது நாடாளுமன்றத்தில் தெரிவிப்பீர்களா?

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம், வேலைவாய்ப்பை அதிகரிப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளீர்கள். ஆனால், இந்த பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு விலைவாசி உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவீர்கள் என்ற எங்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. 10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தருவதாக கூறியிருக்கிறீர்கள். இதை எப்படி நிறைவேற்றுவீர்கள்? மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்த நீங்கள், அதை எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?” என்றார் முலாயம் சிங்.

முலாயமின் பேச்சின்போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அவர்களை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

நீங்கள் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றினால், இந்தியா உலக அளவில் மிகச் சிறந்த நாடாகிவிடும். இந்தி மொழியுடன், அனைத்து மாநில மொழிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டுக்குரியது” என்றார் முலாயம் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x