Published : 10 Jun 2021 12:13 PM
Last Updated : 10 Jun 2021 12:13 PM

பிஹாரில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குளறுபடி; ஒரே நாளில் 72% உயர்வு

பாட்னா

பிஹாரில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ல் இருந்து 9 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் சதவீதம் ஒரே நாளில் 72 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் கரோனா 2-ம் அலை பரவத்தொடங்கியது முதல் பல வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் முழுமையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது.

இதுதொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கரோனா பரவல் அதிகமாக இருந்த ஏப்ரல் - மே மாதங்களில் மாநிலத்தில் கரோனா உயிரிழப்பு குறித்து துல்லியமாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்கும் கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்து அதிகாரப்பூர்வ தகவலில் பதிவு செய்யப்படாமல் இருந்த எண்ணிக்கை தொடர்பாக பிஹார் சுகாதார அமைச்சகம் மறுகணக்கீடு செய்தது.

அந்த மறுகணக்கீட்டில் 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் மாநில சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த உயிரிழப்புகள் மறுகணக்கீட்டின் மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிஹாரில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ல் இருந்து 9 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் சதவீதம் ஒரே நாளில் 72 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த தகவல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உயிரிழப்புகளும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டது.

இதனால், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2,197 உயிரிழப்புகளுடன் பிஹார் அளித்த 3,951 உயிரிழப்பு எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த எண்ணிக்கையாக கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் (2,197 + 3,951) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x