

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி இன்னும் சில வாரங்களில் இந்தியா அழைத்துவரப்படுவார் என மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறியுள்ளார்.
2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வரும் மெகுல் சோக்சியை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த மே 23-ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் காதலியுடன் கியூபா தப்ப இருந்தவரை டொமினிக்கன் தீவு போலீஸார் கைது செய்தனர். ஆனால், சோக்சி தரப்பு இதைமறுத்தது. அவர் கடத்தப்பட்டதாக வும், பார்பரா ஜராபிகா என்ற பெண் அவர் காதலியாக நடித்து கடத்தலுக்கு உதவியதாகவும் கூறினார். இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில்சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பை யும் விசாரித்த பின்னரே வழக்கின் அடுத்த விசாரணை என டொமினிக்கன் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் அவரை இந்தியா கொண்டுவரும் வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "டொமினிக்கன் நீதிமன்ற நடைமுறைகள் குறித்த முந்தைய அனுபவங்கள் இல்லை. ஆனால் சோக்சியை இந்தியா அழைத்துவர மாதங்கள் அல்ல சில வாரங்கள்தான் ஆகும் என்று மட்டும் சொல்ல முடியும்" என்றார்.
டொமினிக்கன் தீவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன், ஆன்டிகுவாவுக்குத் திரும்ப அனுப்பப்படுவதற்கான முயற்சிகளில் மெகுல் சோக்சி வழக்கறிஞர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடத்தலில் தொடர்பில்லை
பார்பரா ஜராபிகா செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்தாண்டு மெகுல் சோக்சி, ராஜ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நட்புடன் பழகினார். போக போக காதலுடன் பேசத் தொடங்கினார். எனக்கு வைர மோதிரஙகள், நெக்லஸ் பரிசளித்துள்ளார். ஆனால் அவை எல்லாம் போலியானவை என்பது பின்னர்தான் தெரிந்தது.அவர் கடத்தப்பட்டதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை" என்றார்.