

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரைபொதுமக்களுக்கு செலுத்துவதற்காக 44 கோடி டோஸ் கரோனா வைரஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூன் 21-ம் தேதி முதல் மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்காக மேலும் 44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை வாங்க கொள்முதல் ஆணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த தடுப்பூசிகள் வாங்கப்படும். இதில் 25 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளாகும். 19 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளாகும். இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு 30 சதவீத தொகை முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ம்தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகம் தொடங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்காததால், நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. மத்திய அரசின் இப்போதைய தடுப்பூசி கொள்முதல் நடவடிக்கை மூலம் தடுப்பூசி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது - பிடிஐ