

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும், மோதலில் ஈடுபடக் கூடாது என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங் கூறியுள்ளார்.
இந்திய இளம் தலைவர்கள் மத்தியில், சீனத் தூதர் சன் வீடோங் நேற்று முன்தினம் இணைய வழியில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. எல்லைப் பிரச்சினை என்பது வரலாற்று காலம் தொட்டு இருக்கக் கூடியது. அதனை இருதரப்புஉறவில் சரியான இடத்தில் வைக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலமாகவே எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது. அதே நேரத்தில் தேசப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் வளர்ச்சிக்கான நலன்களை பாதுகாக்கும் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சமமாக நடத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். இதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும். மோதலில் ஈடுபடக் கூடாது. கரோனா தொற்று நோயை கையாளுவதிலும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதிலும் தற்போது கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சீனத் தூதர் சன் வீடோங் கூறினார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவம் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் காரணமான இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சீனப் படைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படாத வரை சீனாவுடன் வழக்கமான உறவை பேண முடியாது என இந்தியா கூறி வரும் நிலையில், சீனத் தூதர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனத் தூதர் சன் வீடோங் மேலும் கூறும்போது, “சீனாவில் கரோனா பரவல் காரணமாக இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா வருவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. என்றாலும் இந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்கலாம்.
கரோனா இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது அதற்கு முதலில் உதவ முன்வந்த நாடுகளில் சீனாவும் ஒன்று” என்றார். - பிடிஐ