

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் எனவும், நீக்க கூடாது எனவும் பாஜக எம்எல்ஏக்கள் தனித்தனியாக கையெழுத்து வேட்டை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 80 வயது ஆகிவிட்டதால், அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என பசன கவுடா எத்னால் உள்ளிட்ட பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் எடியூரப்பா கரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்டார் என கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஹூப்ளி மேற்கு எம்எல்ஏ அரவிந்த், எடியூரப்பாவை மாற்றக்கோரி எம்எல்ஏக்களின் கையெழுத்தை பெற்று பாஜக மேலிடத்திடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, எடியூரப்பாவை மாற்றிவிட்டு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை முதல்வராக நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், எடியூரப்பாவை சமாளிக்கும் வகையில் அவரது மகன் ராகவேந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் எடியூரப்பா, '' கட்சி மேலிடம் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்''என அறிவித்தார்.
இதனிடையே, பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க கூடாது என 65 பாஜக எம்எல்ஏக்களிடம் ஆதரவு கடிதம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரேணுகாச்சார்யா மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், மூத்த தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட் டோரின் ஆதரவு கடிதத்தையும் சேகரித்துள்ளார். இதனை கர்நாடக பாஜக பொறுப்பாளர் அருண் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளார்.
கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கையெழுத்துக்களை பெற்றுவருவதால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.