

கர்நாடகாவில் 25 வயது கரோனா நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து குல்பர்காவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவில் கரோனா வார்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரேம்சாகர் (23) பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டதை தொடர்ந்து மற்ற நோயாளிகள் பிரேம்சாகரை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அவரை பிரமபூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376-ம் (பலாத்காரம்) பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பிரேம்சாகருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வந்த பிறகு, விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.