‘‘எனது அரசியல் வாழ்க்கையில் இன்று புதிய அத்தியாயம்’’ - பாஜகவில் இணைந்த  ஜிதின் பிரசாதா

‘‘எனது அரசியல் வாழ்க்கையில் இன்று புதிய அத்தியாயம்’’ - பாஜகவில் இணைந்த  ஜிதின் பிரசாதா
Updated on
1 min read

எனது அரசியல் வாழ்க்கையில் இன்று முதல் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது என பாஜகவில் இன்று இணைந்த ஜிதின் பிரசாதா கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜிதின் பிரசாதா. உ.பி.யை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார். இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உ.பி. காங்கிரஸார் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

இந்நிலையில், ஜிதின் பிரசாதா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார். அவருக்கு பியுஷ் கோயல் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும் ஜிதின் பிரசாதா சந்தித்தார்.

பின்னர் ஜிதின் பிரசாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸுடன் எனக்கு மூன்று தலைமுறை தொடர்பு உள்ளது. பல்வேறு ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அமைப்பு ரீதியாக செயல்படும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது. தேசிய கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது.

காங்கிரசில் பணியாற்றும் போது மக்களுக்காக உழைக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தினரால் இயக்கப்படும் கட்சியாக பாஜக இல்லை. எந்த கட்சியில் இருந்தேன், எந்த கட்சியில் இணைந்துள்ளேன் என்பது முக்கியமல்ல.
ஆனால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம்.

எனது அரசியல் வாழ்க்கையில் இன்று முதல் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. புதிய இந்தியாவை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். நாட்டிற்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in