

உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரான ஜிதின் பிரசாதா பாஜகவில் இன்று இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா இணைந்தார். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
2019-ம் ஆண்டு நாடாளுமுன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்றார். ஆனால் இன்னமும் முழுநேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆக்கபூர்வமான தலைமை இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர்.
குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபேந்தர் ஹூடா, பிரிதிவிராஜ் சவான், கபில் சிபல், மணிஷ்திவாரி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 23 பேர் எழுதிய கடிதம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு 23 தலைவர்களும் அவ்வப்போது ஆலோசனை நடததி வருகின்றனர். அவர்களில் சிலரை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டு வந்தது.
கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்களில் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதாவும் (வயது 47) ஒருவர்.
காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவருமான மறைந்த, ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாதா. உ.பி.யை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார். இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உ.பி. காங்கிரஸார் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
இந்நிலையில், ஜிதின் பிரசாதா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார். அவருக்கு பியுஷ் கோயல் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும் ஜிதின் பிரசாதா சந்தித்தார்..