Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

நாட்டிலேயே முதல் முறையாக 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டிய காஷ்மீர் கிராமம்

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி (முதல் டோஸ்) செலுத்தப்பட்ட முதல் கிராமம் என்ற பெருமையை காஷ்மீரின் வேயான் கிராமம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டத்தில் தொலைதூர மலைப்பகுதியில் உள்ளது வேயான் என்ற கிராமம். சாலை, மின்சாரம், மற்றும் மொபைல் நெட்ஒர்க் வசதியில்லாத இக்கிராமம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபருக்குப் பிறகு பனிப் பொழிவால் உலகின் பிற பகுதிகளிடம்இருந்து துண்டிக்கப்பட்டு விடும்.

இந்நிலையில் கடந்த வாரம் இந்தக் கிராமத்துக்கு சுகாதாரத் துறையை சேர்ந்த 10 பேர், வனம் மற்றும் மலைப்பாதை வழியே 11 கி.மீ. நடைப்பயணமாக சென்றனர். கிராமத்தில் 2 நாள் தங்கியிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட 362 பேருக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தினர்.

இதுகுறித்து பண்டிப்போரா வட்டார மருத்துவ அதிகாரி மஸ்ராத் இக்பால் கூறும்போது, “வேயான் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தி முடித்தோம். இதற்கு மேல் காத்திருந்தால், குரேஸ் பிராந்தியத்தின் உயர்ந்த பகுதிகளில் அவர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். மேலும் அக்டோபருக்குள் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்த முடியாது. 12 வாரங்களுக்குப் பிறகு கிராமத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அப்போது, கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள் எனக் கேட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.

சுகாதாரத் துறை இயக்குநர் சலீம் உர் ரஹ்மான் கூறும்போது, “வேயான் கிராம மக்கள் நடோடிகள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் மலைப்பாதையில் நடைப் பயணமாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டிய கிராமங்கள் பல உள்ளன. இவற்றை பட்டியலிட்டுள்ளோம். இந்த கிராமங்களில் ஒரே தடவையில் 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x