

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோ ருக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வரும் அருணாச்சல பிரதேச அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அருணாச்சல பிரதேச மாநிலம் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ளது யலாலி கிராமம். மிகவும் சிறிய இந்த மலை கிராமத்தில் மொத்தம் 12,000 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்களில் 1,400 பேர் 45 வயதை கடந்தவர்கள் ஆவர். கரோனா பரவலை தடுப்பதற்காக 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட போது, இந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தடுப்பூசி தொடர்பாக பரவிய வதந்திகளாலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வுற்றது.
இதையடுத்து, வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை கிராம நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, அவர்களில் 84%பேருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. ஆனால், 209 பேர் மட்டும் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர். எத்தனை முறை எடுத்துக் கூறியும், தடுப்பூசி குறித்த அச்சம், அவர்களிடம் இருந்து அகலவில்லை.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக புதிய வழிமுறை ஒன்றினை யலாலி வட்டாட்சியர் டாஷி வாங்சூ அண்மையில் கண்டறிந்தார். அதன்படி, ஜூன் 7 முதல் 9-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார். ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இந்த அறிவிப்புக்கு அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நேற்று முன்தினம் முதல் நீண்ட வரிசையில் நின்று அந்த கிராம மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. 45 வயதை கடந்தவர்கள் மட்டுமின்றி 18 வயதுக்கு மேற்பட்டோரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து யலாலி வட்டாட்சியர் டாஷி வாங்சூ கூறுகையில், “கரோனா தடுப்பூசி குறித்து அதிக அளவிலான வதந்திகள் இந்த கிராமத்தில் பரவி வந்தன. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 2 ஆண்டுகளில் உயிரிழப்பு ஏற்படும் என கிராம மக்கள் உறுதியாக நம்பினர். அதுமட்டுமின்றி, சில நாட்கள் மதுபானம் அருந்தக் கூடாது என்பதால், தடுப்பூசி செலுத்த பல ஆண்கள் முன்வரவில்லை. எனவேதான், 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்தேன்.290 பேருக்கு தலா 20 கிலோ அரிசி வாங்கும் செலவை சில செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டதால் இது சாத்திய மாயிற்று" என்றார்.