Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

நுரையீரல் பாதித்த மருத்துவருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராமத்தினர்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

தங்களது கிராமத்துக்கு மருத்துவ சேவைகள் செய்தும், கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பல உயிர்களை காத்த ஆரம்ப சுகாதார மருத்துவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையை அறிந்த கிராம மக்கள், ரூ. 20 லட்சம் வரை நிதி திரட்டி உதவி செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கர் ராவ் (38). இவர் இதேமாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்யலட்சுமி (34). மருத்துவரான இவர், குண்டூர் மருத்துவக் கல்லூரியில் துணை நிலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவும் பகலுமாக மருத்துசேவை புரிந்ததோடு, கரோனாகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இருவரும் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாக்யலட்சுமி கரோனாவிலிருந்து விடுபட்டார். ஆனால், மருத்துவர் பாஸ்கர் ராவ் தீவிர நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். முதலில்அவர், குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல்ஏற்பட்டு ஆக்சிஜன் பொருத்தப்பட்டது. அங்கிருந்து விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக சுமார் ரூ.1.5 முதல் 2 கோடி வரை செலவாகலாம் எனவும் கூறினர்.

இதைக் கேட்டு அவரது மனைவி பாக்யலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும், சிறிதளவு பணத்தை திரட்டி,அங்கிருந்து ஹைதராபாத் கச்சிபல்லி மருத்துவமனையில் கணவரை சேர்த்தார். அங்கும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுமார்ரூ.2 கோடி வரை செலவு செய்தால் மட்டுமே மருத்துவர் பாஸ்கர்ராவ் பிழைப்பார் என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் செய்வதறியாது பரிதவித்த மனைவி பாக்யலட்சுமி, இது குறித்து தனக்கு தெரிந்த சிலர் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தை திரட்டி முடிவு செய்தார்.

ஆனால், தங்களது கிராம மக்களுக்கு இரவும், பகலும் அயராது மருத்துவ சேவை புரிந்த டாக்டர் பாஸ்கர் ராவ் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு எட்டியது. அதிர்ச்சியுற்ற அவர்கள் அனைவரும் ஒன்று கூடி டாக்டருக்கு உதவ முடிவு செய்தனர்.

அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தை சேர்த்தனர். பலர் சேமிப்பு பணத்தை கூடடாக்டரின் உயிர் காக்க கொடுக்க முன் வந்தனர். அதன்படி ரூ.20 லட்சம் வரை பணம் சேர்ந்தது. அவற்றை டாக்டர் பாக்யலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவ செலவை கவனியுங்கள் எனதெரிவித்தனர்.

ஆனால், இப்பணத்தை வைத்து தனது கணவரை காப்பாற்ற முடியாது என்பதால், சில மருத்துவ குழுவின் நிர்வாகிகள் மூலம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும், டாக்டர் பாஸ்கர் ராவின் மருத்துவத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என ஜெகன்மோகன் அறிவித்தார். இதனை தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x