

நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் டிசம்பர் இறுதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, மொத்தம் 187.2 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. முதலில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதை கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மே 1-ம் தேதி முதல் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இருந்தபோதிலும், 45 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசியை இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 18 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக, மாநிலங்களுக்கு போதிய அளவு தடுப்பூசி கிடைக்காத சூழல் ஏற்பட்டதால், தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே, "மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்தியஅரசே கொள்முதல் செய்து மாநிலஅரசுகளுக்கு இலவசமாக வழங்கும்" என பிரதமர் நரேந்திர மோடிநேற்று முன்தினம் அறிவித்தார். ஆதலால், இனி தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து கொள்முதல் செய்யும் அளவுக்கு நாட்டில் தடுப்பூசி உற்பத்தி இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறிய தாவது:
18 வயதை கடந்த அனைவருக்கும் நடப்பாண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்கான முழு திட்ட வரைவும் தயார் செய்யப்பட்டு விட்டது. கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்திற்காக 53.3 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு அரசின் கைவசம் இருக்கின்றன. தற்போது ஆகஸ்ட் முதல் டிசம்பர்மாதம் வரையிலான பயன்பாட்டுக்கு 133.6 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 187.2 கோடி டோஸ்களுடன், இந்தியாவில் உள்ள 18வயதை கடந்த 94 கோடி பேருக்கும் தடுப்பூசிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் செலுத்தப்பட்டு விடும்.
இதற்காக, உள்நாட்டு மருந்து நிறுவனங்களில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசி உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, 'நடப்பாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி' என்ற இலக்கை நாம் எளிதில் அடைந்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். - பிடிஐ