

போலி சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் எம்.பி.யும் நடிகையுமான நவ்னீத் கவுருக்கு மும்பை உயர் நீதிமன்ற கிளை ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரம் அமராவதி ஆகும். இது எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கான தனித்தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 2014-ம் ஆண்டு சிவசேனா வேட்பாளர் ஆனந்த்ராவ் அதுசுல்லை எதிர்த்து நடிகை நவ்னீத் கவுர் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் அதே ஆனந்த்ராவை எதிர்த்து நடிகை நவ்னீத் கவுர் போட்டியிட்டார். இம்முறை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டதால், ஆனந்த்ராவை தோற்கடித்து நவ்னீத் கவுர் எம்பியானார். மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பெண் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
இதனிடையே நவ்னீத் போலி சாதி சான்றிதழைச் சமர்ப்பித்து தனித்தொகுதியில் போட்டியிட்டார் என்று தோல்வியடைந்த ஆனந்த ராவ் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நடிகை நவ்னீத் கவுர், பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். அவர் லபானா சாதியைச் சேர்ந்தவர். இந்தச் சாதியானது மகாராஷ்டிராவின் பட்டியலின சாதிக்குள் அடங்காது. ஆனால், அவர் பட்டியலினத்துக்குள் வரும் மோச்சி என்ற சாதியின் பெயரில் சாதி சான்றிதழை சட்டவிரோதமாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நேற்று நாக்பூர் உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியது. போலியான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ள குற்றத்துக்காக ரூ.2 லட்சம் அபராதத்தை நவ்னீத் கவுர் செலுத்த வேண்டும் என்றும், மேலும் சான்றிதழை நீதிமன்றத்தில் 6 மாத காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நடிகை நவ்னீத் கவுர், தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.