

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மலேசியாவில் வசிக்கும் நால்வருக்கு சம்மன் வழங்க அந்நாட்டு அரசு சில ஆட்சேபணைகளை எழுப்பியுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி வைத்தும், தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்தும் ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்துள்ளார். அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், மலேசியாவில் வசிக்கும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல், தொழிலதிபர் டி. அனந்த கிருஷ்ணன் மற்றும் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெர்ஹாட், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் பிஎல்சி நிறுவனங்கள் ஆகிய நால்வருக்கு நீதிமன்றம் சம்மன் வழங்கியது.
ஆனால், இவற்றை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.இவ்வழக்கு நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மலேசியாவில் உள்ள நால்வருக்கு சம்மன் வழங்குவதில் அந்நாட்டு அரசு சில ஆட்சேபணைகளை எழுப்பியுள்ளது. அந்த ஆட்சேபணைகளுக்கு உரிய அரசுத் துறைகள் மூலம் பதில் அனுப்பப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நடவடிக்கைகளுக்காக 6 மாதம் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி “அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் இது தொடர்பான மனுவைச் சமர்ப்பித்துள்ளார். மலேசிய தரப்பு ஆட்சேபணைகளை உரிய ராஜாங்க ரீதியாக பதில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதற்காக 6 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது.
வரும் ஜூலை 11 2016-க்குள் மேற்குறிப்பட்ட நான்கு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும்” என தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.