Published : 08 Jun 2021 04:36 PM
Last Updated : 08 Jun 2021 04:36 PM

கரோனா தடுப்பில் உச்ச நீதிமன்ற பணி; பாராட்டி கடிதம் எழுதிய சிறுமி: பரிசு அனுப்பிய தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 5ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் கடிதம் எழுதி நீதிபதியின் பாராட்டையும் அவரிடமிருந்து பரிசையும் பெற்றிருக்கிறார்.

சிறுமி எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:

நான் லிட்வினா ஜோசப், கேரள மாநிலம் திரிசூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறேன். தி இந்து நாளேட்டில் தேசிய செய்திகள் பக்கத்தில், கரோனா செய்திகளைப் படித்தேன்.

டெல்லியில் நடைபெற்ற கரோனா மரணங்கள் குறித்தும் நாட்டின் பிற பகுதிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்தும் வேதனையடைந்தேன்.

பின்னர் தொடர்ந்து செய்தித்தாள்வழியாக, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டிருப்பதை அறிந்து கொண்டேன். சாமான்ய மக்களின் துயரங்களையும், உயிரிழப்பையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த உத்தரவிட்டதை தெரிந்துகொண்டேன். நீதிமன்ற உத்தரவால் இன்று நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா மரணங்களை குறைப்பதில் உச்ச நீதிமன்றம் பலனளிக்கும் நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் தெரிந்து கொண்டேன். மாண்புமிகு நீதிபதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன் பெருமிதம் கொள்கிறேன்.

லிட்வினா ஜோசப்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதததை ஓர் ஓலை வடிவில் அவர் எழுதியிருக்கிறார். கூடவே ஒரு படமும் அவர் வரைந்து அனுப்பியிருக்கிறார்.

வண்ணமயமான அந்தப் படத்தில் நீதிபதி ஒருவர் தனது சுத்தியால் கரோனா வைரஸின் தலையில் ஓங்கி அடிப்பதுபோல் சித்தரித்திருக்கிறார். அந்தப் படத்தின் பின்னணியில் மகாத்மா காந்தியின் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.

நீதிபதியின் பாராட்டும், பரிசும்..

இதற்கு பதிலளித்து தலைமை நீதிபதி ரமணா, "உனது அழகான கடிததும், அத்துடன், ஒரு நீதிபதியின் பணியை சித்தரிக்கும் மனதுக்கு இதமான ஓவியமும் கிடைக்கப்பெற்றேன். நீ வருங்காலத்தில் நிச்சயமாக விழிப்புடன் கூடிய பொறுப்பான குடிமகளாக வளர்வாய்" என பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.

கூடவே, அவர் கையொப்பம் இட்ட அரசியல் சாசனப் புத்தகம் ஒன்றையும் பரிசாக அனுப்பியிருக்கிறார்.

மேலும், 10 வயது பள்ளிக்குழந்தை நாட்டில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிப்பதும், தன் சக குடிமக்களின் வேதனையை அறிந்து உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடைந்திருப்பதும் பெருமையளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x