

பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி 2018-ம்ஆண்டு அம்மாநில அரசு சட்டம்நிறைவேற்றியது. அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து.
மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக மராத்தா அமைப்புகளும், பாஜகவும் அறிவித்தன.
மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ‘‘ மகாராஷ்டிர மாநிலம் கரோனாவால் கடுமையான பாதிப்பை சந்தித்து தற்போது மீண்டு வருகிறது. மக்களை கரோனாவில் இருந்து காப்பாற்ற நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் சில கட்சிகள் இந்த கரோனா காலத்திலும் (பாஜக) அதிகாரத்திற்கு வர நினைக்கிறார்கள். இந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என செயலாற்றுகிறார்கள்’’ என விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை, ஓ.பி.சி. இட ஒதுக்கீடு மற்றும் டவ்தே புயல் நிவாரணம், ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது உத்தவ் தக்கரேவுடன் துணை முதல்வர் அஜித் பவார், பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவானும் உடன் இருந்தனர்.