

கரோனா வைரஸ் பெருந்தொற் றால் பெற்றோர் உயிரிழக்கும் போது பாதிக்கப்படும் சிறுவர்களின் நிலைமை குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்), உச்ச நீதிமன்றத் தில் கூறும்போது, ‘‘கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஜூன் 5-ம் தேதி வரையிலான கணக்கெடுப்புப்படி கரோனா வைரஸ் பெருந்தொற்றால் 30,071 சிறார்கள் தங்களது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரை யுமோ இழந்துள்ளனர். 30,071 சிறார்களில் 15,620 பேர் சிறுவர்கள், 14,447 சிறுமிகள். 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இதில் 3,621 பேர் தங்களது பெற்றோர் இருவரையுமே இழந் துள்ளனர். மேலும் இதில் 274 சிறுவர்கள் அநாதைகளாக விடப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆதரவற்ற குழந் தைகளை தத்தெடுப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் கள் வெளியாகி வருகின் றன. இது சட்ட விரோதமானது என்றும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘‘ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் கவனிப்பாரின்றி சரணடைந்த குழந்தைகளை தத்தெடுப்பதற்கு சிறார் நீதிச் சட்டம் 2015-ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதன்பிறகு தகுந்த அதிகாரி கள் தத்தெடுப்புக்கான இறுதி உத்தரவு பிறப்பிப்பார்கள். இந்தநடைமுறைகளுக்கு பின்னரே, குழந்தைகளை தத்தெடுப்பது சட்டபூர்வமானதாக இருக்கும். இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் தத்தெடுத்தால் அது செல்லாது’’ என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, ‘‘ஆதரவற்ற குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பதை தடுக்க இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும். குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பதை தடுக்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு அவர்களது எதிர்காலம் காக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக தத்தெடுப்பதை தடுக்க தேவையான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்கும்’’ என்று தெரிவித்தனர்.