

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட புதிய திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன்படி எந்த வாக்குச் சாவடியில் மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குச் சாவடிக்கு சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதுதொடர்பாக அடுத்த 2 நாட்கள் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தேர்தலை போன்று அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் கரோனா தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுகிறவர்களுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் தெளிவான விளக்கம் அளிப்பார்கள். அடுத்த 4 வாரத்துக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பிங்க் மையம்: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 2 கோடி கரோனா தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பெண்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க பிங்க் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.