Last Updated : 08 Jun, 2021 03:12 AM

 

Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

2022-ம் ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் தேர்வு: டெல்லியில் நடைபெற்ற 3 நாள் கூட்டத்தில் அங்கீகரித்தது ஆர்எஸ்எஸ்

புதுடெல்லி

பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் யோகி ஆதித்யநாத், கரோனா பரவலை சமாளிக்கவில்லை எனவும், அவருக்கு எதிராக அவரது அமைச்சரவை சகாக்கள் போர்க்கொடி தூக்குவதாகவும் புகார் எழுந்தது.

இங்கு அடுத்த வருடம் பிப்ரவரியில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்புகார் மீது விசாரணை நடத்த பாஜக தலைமை முடிவு செய்தது. இதற்காக கடந்த வாரம் மே 1-ல் இரண்டு நாள் பயணமாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் மற்றும் ராதா மோகன் சிங் ஆகியோர் லக்னோ அனுப் பப்பட்டனர்.

இவர்கள், மாநில அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், அதன் தாய்அமைப்பான ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் விசாரித்தனர். அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக முன்னிறுத்தலாம் எனவும், அவருக்கு ஈடாக கட்சியில் எவரும்இல்லை என்றும் அறிக்கை அளித்ததாகத் தெரிந்தது. வேண்டுமானால், அமைச்சரவையை விரிவு படுத்தினால் போதுமானது என்ற கருத்தும் அதில் இருந்தது.

பிரதமர் மோடியுடன் குஜராத் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய அர்விந்த் சர்மா எனும் ஐஏஎஸ் அதிகாரி மீதும் சர்ச்சைகள் எழுந்திருந்தது. ஓய்வுபெற்ற பின் உ.பி.யின் மேலவை உறுப்பினராக்கப்பட்ட அர்விந்த் சர்மாவை பாஜக தலைமை துணைமுதல்வராக்கி, யோகி ஆதித்யநாத்துக்கு இணையாக புதிய நிர்வாகக்குழு அமைக்க முயல்வதாகவும் கூறப்பட்டது. இது தனக்கு எதிராக செயல்படும் என அஞ்சி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்க மறுப்பதாகவும் பேசப்பட்டது. இதனால், கடந்த ஐந்து மாதங்க ளாக அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஆர்எஸ்எஸ் டெல்லியில் கூட்டிய 3 நாள் கூட்டத்தில், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்கள் அளித்த அறிக்கைக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவளித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இது, வாஜ்பாய் காலத்தில் அவருக்கு இணையான இரண்டாம் கட்டத் தலைவர் உ.பி.யில் இருந்ததில்லை. அதுபோல், வெற்றிடம் ஏற்படக் கூடாது என பிரதமர் மோடிக்கு இணையாக முதல்வர் யோகியை ஆர்எஸ்எஸ் வளர்ப்பதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத்தையே முதல்வராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவளித்ததற்குகாரணம் உள்ளது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இந்துத்துவா கொள்கையை தூக்கிப் பிடிக்க யோகியால் மட்டுமே முடியும் எனக் கருதுகிறோம். இது, சமீபகாலத் தேர்தல்களில் மோடிக்கு அடுத்த நிலையில், யோகி பிரச்சாரம் செய்ததில் நிரூபணமாகி உள்ளது’ என்றன.

உபி தேர்தலில் பாஜக வெற்றி கண்ட பின் அதன் மாநில தலைவராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியாவும், உபியை சேர்ந்த மத்தியஅமைச்சரான மனோஜ் சின்ஹாவின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பேசப்பட்டன. அப்போது எந்த முயற்சியும் செய்யாமல் கோரக்பூரின் எம்.பியாக தொடர்ந்த யோகியை, திடீர் என ஆர்எஸ்எஸ் உபிக்கு முதல்வராகத் தேர்வு செய்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x