Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

‘கேஎஸ்ஆர்டிசி’ பெயரை பயன்படுத்த கேரள அரசுக்கே உரிமை உள்ளது: பழைய மலையாள திரைப்படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு

கேஎஸ்ஆர்டிசி என்றால் பொதுவாக அனைவரும் அறிந்தது கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் என்பதன் சுருக்கம்தான். ஆனால் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் கேஎஸ்ஆர்டிசி என்றுதான் செயல்பட்டு வந்தது.

இது தொடர்பாக இரு மாநில போக்குவரத்துக் கழகங்களும் உரிமை கொண்டாடி வந்தன. ஏறக்குறைய 7 ஆண்டுகளாக நீடித்து வந்த சட்ட ரீதியான போராட்டத்தில் கேரள அரசுக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கு 1969-ல் வெளியான திரைப்படம் ஒன்று ஆதாரமாக அமைந்துள்ளது.

கேஎஸ்ஆர்டிசி குறித்த டிரேட் மார்க் (வணிக முத்திரை) பதிவு குறித்த வழக்கில், கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த ஆவணங்களில் பிரேம் நசீர், ஷீலா நடித்த ``கண்ணூர் டீலக்ஸ்'’ என்ற திரைப்படமும் ஒன்றாகும். 1969-ல் வெளியான இந்த திரைப்படத்தில் எர்ணாகுளம் பஸ் ஸ்டாண்டு இடம்பெறும். இதில்சிஐடி கதாபாத்திரத்தில் பிரேம் நசீர்நடித்திருப்பார். கேஎஸ்ஆர்டிசி பஸ்ஸில் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பாகஅவர் விசாரிப்பார். கண்ணூர்டீலக்ஸ் பஸ் கண்ணூருக்கும், திருவனந்தபுரத்துக்கும் இடையேஓடும். இந்த கதை முழுவதும் பஸ்ஸிலேயே நடைபெறுவதாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா வழக்கு

இந்த விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஆனால்தங்களுக்கு எத்தகைய நோட்டீஸும் வரவில்லை என கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் சிவயோகி கலாசத் தெரிவித்துள்ளார்.

நோட்டீஸ் வராத பட்சத்தில் அது சட்ட ரீதியானதல்ல. இதனால்கேஎஸ்ஆர்டிசி என்ற பெயரை பயன்படுத்துவதில் எங்கள் நிறுவனத்துக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பிரச்சினை 2013-ல் உருவானது. முதலில் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து 2015-ல் கேரள அரசு வழக்கு பதிவு செய்தது.

திருவாங்கூர் மாநில போக்குவரத்துக் கழகம் கேஎஸ்ஆர்டிசி ஏப்ரல் 1, 1965-ல் உருவாக்கப்பட்டது. அதேசமயம் மைசூர் அரசு சாலை போக்குவரத்து துறை (எம்ஜிஆர்டிடி), 1948-ல் உருவானது. இது பின்னர் கர்நாடக அரசு சாலை போக்குவரத்துக் கழகமாக (கேஎஸ்ஆர்டிசி) 1973-ல் உருவானது.

இது தொடர்பாக அறிவுசார்சொத்துரிமை வாரியத்தில் (ஐபிஏபி) வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஐபிஏபி கலைக்கப்பட்டதால், இந்த வழக்கு மாநிலஉயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இத்தீர்ப்பின்படி கேஎஸ்ஆர்டிசி என்ற பெயரை பயன்படுத்த கேரள அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது. இதை இனி கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் பயன்படுத்த முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x