

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ‘காதி' பிராண்டை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த ‘காதி டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘மிஸ் இந்தியா காதி பவுண்டேசன்’ என்ற இரு தனியார் அமைப்புகள் தங்கள் தயாரிப்புக்கு ‘காதி’ என்பதாக பிராண்ட் செய்து மக்களை ஏமாற்றி வருவதாக காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) குற்றம்சாட்டியது. அதைத் தொடர்ந்து அந்த இரு நிறுவனங்கள் ‘காதி’ என்ற பெயரை பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
‘அவ்விரு நிறுவனங்களின் பெயர்கள் கேவிஐசி-யின் வணிகமுத்திரையைக் குறிக்கும் வகையில் உள்ளன. இது ஏமாற்றும் வகையில் உள்ளது’ என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், அவ்விரு நிறுவனங்களும் தங்கள் சமூக வலைதள கணக்குகளை நீக்கவேண்டும் என்றும் அந்நிறுவனங்களின் இணையப் பக்கங்களில் உள்ளடக்கங்களை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
‘காதி’ பிராண்டை தவறாகப் பயன்படுத்தும் போக்கு சமீப காலங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் காதி, கிராம தொழில் ஆணையம் தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டுவருகிறது. ‘காதி’ பிராண்டை பயன்படுத்திய 1000 தனியார் நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபேபிண்டியா என்று நிறுவனம் ‘காதி’ பிராண்டை பயன்படுத்தியதற்காக காதி, கிராமதொழில் ஆணையம் ரூ.500 கோடிநஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.