செவிலியர் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை: டெல்லி மருத்துவமனை உத்தரவால் சர்ச்சை

செவிலியர் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை: டெல்லி மருத்துவமனை உத்தரவால் சர்ச்சை
Updated on
1 min read

டெல்லி அரசு மருத்துவமனையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்றும், மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் பெருமளவு கேரளாவைச் சேர்ந்தவர்கள் செவிலியராக பணியாற்றுகின்றனர். இதில் டெல்லி மாநில அரசுக்கு சொந்தமான கோவிந்த வல்லபபந்த் ஜிப்மர் மருத்துவமனையும் ஒன்று.

அந்த மருத்துவமனையில், ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே அலுவலக மொழியாக உள்ளதால், இதில் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

இந்தநிலையில் இந்த மருத்துவமனை நோயாளி ஒருவர் சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலக மொழியாக ஆங்கிலம், இந்தி இருக்கும்போது, சில செவிலியர் மலையாளத்தில் பேசுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் நோயாளிகளுக்கு சிரமமாக உள்ளது. தெரியாத மொழியில் பேசுவதால் சிகிச்சை பெறுவோருக்கு தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புண்டு, எனவே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே செவிலியர் பேச உத்தரவிட வேண்டும் எனக் புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதனையடுத்து டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‛‘அலுவலக மொழியான இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும். மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கப்பட்டிருந்தது.

மேலும், மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு அசவுகரியத்தை தருவதாகவும், பெரும்பாலான நோயாளிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதால் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மலையாள மொழியை சுட்டிக்காட்டி கூறியிருப்பதற்கு பல செவிலியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து அந்த சுற்றறிக்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in