

குஜராத் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக நகரங்களிலும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிராமப்புறங்களிலும் முன்னிலையில் உள்ளன.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்ற பின்னர் மூத்த அமைச்சர் ஆனந்திபென் படேல் முதல்வர் பதவியேற்றார். இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்புகளில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி நடந்த போராட்டம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் கடந்த மாதம் 26 மற்றும் 29-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனந்திபென் படேல் முதல்வர் பதவியேற்ற பின் நடக்கும் பெரிய தேர்தல் என்பதாலும், படேல் சமூகத்தினரின் போராட்டத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப் பட்டன. கிராமங்களில் காங்கிரஸ் கட்சியும் நகரங்களில் ஆளும் பாஜக.வும் முன்னிலை வகித்தன. மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளில் 9 இடங்களில் காங்கிரஸும் 4 இடங்களில் பாஜக.வும் முன்னிலை வகிக்கின்றன. மாநகராட்சி, நகராட்சிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் தபி மாவட்ட பஞ்சாயத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், வதோதரா ஆகிய 6 மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்த 6 மாநகராட்சிகளும் கடந்த முறையும் பாஜக.விடமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 56 நகராட்சிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. எனினும் 230 தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.