

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் சர்வதேச விமான போக்குவரத்து முடங் கியது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று குறைந்துள்ளது. எனவே, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த சில கட்டுப்பாடுகளுடன் விமான சேவைக்கு அனுமதி வழங்க பல நாடுகள் முடிவெடுத்துள்ளன.
குறிப்பாக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அளித்தால் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக் கலாம் என்று அந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்த வரையில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகரிக்க வில்லை. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்தியாவில் வழங்கப் படுகிறது. அதற்கும் அந்நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி, அவசர காலத்துக்கு பயன்படுத்தலாம் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளது.
இதனால் கோவாக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை சேர்க்க, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கேட்ட பெரும்பாலான ஆவணங்கள், தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் உலக சுகாதார நிறு வனத்தின் பட்டியலில் கோவாக்சின் இடம்பெறும் புதிய மைக் கல்லை இந்தியா எட்டிவிடும்.
கோவாக்சின் தடுப்பூசி உலகசுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்று விட்டால், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி இன்னும் வேகமெடுக்கும்.
இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுகாதார நிறுவனம் கேட்டவற்றில் 90 சதவீத ஆவ ணங்கள் மற்றும் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அளித்துவிட்டது. இன்னும் 10 சதவீத ஆவணங்களை அளித்த பிறகு உலக சுகாதார நிறுவனம் அவற்றை ஆய்வு செய்து தனது பட்டியலில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - பிடிஐ