

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்திலும் போட்டியிட இருக்கிறார். அவருடன் அம்மாநில அமைச்சர்கள் நால்வரும் களமிறங்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநில தேர்தல் குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், குஜராத்திலும் மோடி போட்டியிட வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அவருடன் மாநில விவசாயத் துறை அமைச்சர் பாபுபாய் போக்ரியா, வனத்துறை அமைச்சர் கண்பத் வாசவா, மின்சாரம் மற்றும் பெட்ரோலியதுறை அமைச்சர் சவுரப் பட்டேல், நிதி அமைச்சர் நிதின் பட்டேல் ஆகிய நால்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பின்போது, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி போட்டியிடும் தொகுதியும் வெளியாக இருக்கிறது.
குஜராத்தில் மோடி போட்டியிடுவது தொடர்பான இறுதி முடிவை மத்திய தேர்தல் குழு 19-ம் தேதி கூடி அறிவிக்கும்.
1996-ல் வாஜ்பாய், லக்னோ மற்றும் காந்தி நகரில் போட்டி யிட்டார். எனவே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் இருதொகுதிகளில் போட்டியிடுவது பாரம்பரியமே என்று அக்கட்சியினர் கூறியுள்ளனர்.