

கான்பூரின் தேடப்படும் குற்றவாளி மனோஜ்சிங், அவரை தப்பவிட்ட பாஜக தலைவர் நாராயண்சிங் இருவரும் நொய்டாவில் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் மனோஜ்சிங் தலைக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் ஜுனில் கான்பூரின் பிக்ரு கிராமத்தில் பிரபல குற்றவாளியான விகாஸ் துபேவை போலீஸார் கைது செய்யச் சென்றனர். இதில், டிஎஸ்பி மற்றும் 3 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட எட்டு போலீஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலியாகினர்.
நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை அடுத்து உ.பி.யின் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதில், தலைக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்ட மனோஜ்சிங்கும் ஒருவராக இருந்தார்.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் தெற்கு பகுதி மாவட்ட பாஜக தலைவராக இருந்த நாராயண்சிங் பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு சுமார் 200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவராக கான்பூர் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான மனோஜ்சிங்கும் விழாவிற்கு வந்திருந்தார். இந்த தகவலால் மனோஜ்சிங்கை கான்பூர் போலீஸார் சாதாரண உடைகளில் மறைந்திருந்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது, ஜீப்பில் ஏற்றப்பட்டவரை அதன் முன்பாக படுத்த நாராயண்சிங்கின் ஆதரவாளர்கள், போலீஸாரிடமிருந்து மனோஜ்சிங்கை தப்ப விட்டனர். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி, சமூகவலைதளங்களில் வைரலானது.
இதனால், நாராயண்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீது கான்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பாஜக தலைமையும் நாராயண்சிங்கை கட்சியிலிருந்து நீக்கியதுடன், விசாரிக்கக் குழு அமைத்தது.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த நாராயண்சிங்கும், மனோஜ்சிங்கும் நேற்று இரவு நொய்டாவில் கைது செய்யப்பட்டனர். மனோஜ்சிங் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் பதிவாகி உள்ளன.