கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு தெலங்கானா முதல்வர் எதிர்ப்பு: முதலில் மகாநதியை இணைக்க வலியுறுத்தல்

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு தெலங்கானா முதல்வர் எதிர்ப்பு: முதலில் மகாநதியை இணைக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

ரூ.86 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு (என்டபுள்யூடிஏ) ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, இதற்கான திட்ட அறிக்கையை (டிபிஆர்) சம்பந்தப்பட்ட மாநிலங் களுக்கு அனுப்பியுள்ளது.

தெலங்கானா மாநிலம், இச்சம்பள்ளியில் இருந்து தமிழகத் தில் உள்ள கல்லணை வரை 1,211 கி.மீ. தொலைவுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனா சாகர் அணை மற்றும் ஆந்திராவில் உள்ள சோமசீலா அணை வழியாக தமிழகத்தின் கல்லணைக்கு கால்வாய் மற்றும் பைப்லைன் வழியாக கோதாவரி நீர் கொண்டு வரப்படுகிறது. இதில் கிருஷ்ணா, பென்னா ஆகிய நதிகளும் இணைகின்றன.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இத்திட்டத்தை தமிழக அரசு வரவேற்றுள்ளது. ஆனால், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இத்திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்க்கிறார். இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். மாநில நீர்வளத்துறை அமைச்சராக தனது மருமகன் ஹரீஷ்ராவ் இருந்த போதே சந்திரசேகர ராவ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் கோதாவரி நதி மீது சில அணைகள் கட்டவேண்டியிருப்பதால் காவிரி இணைப்பு திட்டத்தால் தங்கள் மாநிலத்தில் வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் என அவர் கருதுகிறார். ஆதலால், முதலில் மகாநதி - கோதாவரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதன் பிறகு கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இதனால் மகாநதி - கோதாவரி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதனிடையே கோதாவரி - காவிரி நதிநீர் திட்டத்தில் மத்திய அரசு தனது பங்களிப்பை 60 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வெறும் 10 சதவீத நிதி ஒதுக்கினால் திட்டத்தை எளிதாக நிறைவேற்றி விட முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in