Published : 16 Dec 2015 06:44 PM
Last Updated : 16 Dec 2015 06:44 PM

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்; 6 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் 50-வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி29 நேற்று மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான ‘இஸ்ரோ’, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் ஏராளமான செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தி சாதனை புரிந்து வருகிறது. இதில் சில வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் அடங்கும்.

இந்நிலையில், சிங்கப்பூ ருக்கு சொந்தமான 6 செயற் கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இது ஒரு வர்த்தக ரீதியிலான நடவடிக்கை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் ராக்கெட்டை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு, கடந்த 14-ம் தேதி காலை 7 மணிக்கு 59 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது. திட்டமிட்டபடி, நேற்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் வெற்றிகரமாக விண் ணில் செலுத்தப்பட்டது. இதை யடுத்து கணினி கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மொத்தம் 44.4 மீட்டர் உயரம் கொண்ட பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்டின் மொத்த எடை 227.6 டன் ஆகும். ராக்கெட்டின் 4 எரிபொருள் நிலைகளும் சிறப்பாக செயல்பட்டன. ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த 18 நிமிடம் 12 வினாடியில் செயற் கைக் கோள்கள் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு பூமியில் இருந்து 550 கி.மீ. தொலைவில் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டன.

இஸ்ரோ தலைவர் பாராட்டு

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப் பட்டதைத் தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-29 திட்ட இயக்குநர் பி.ஜெய குமார் மற்றும் இப்பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் பாராட்டு தெரிவித்தார். விஞ்ஞா னிகள் மத்தியில் அவர் பேசும் போது, ‘‘இஸ்ரோவின் 50-வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட் டுள்ளது. இந்த 50-வது ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் 6 செயற் கைக்கோள்களை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தியிருக்கிறோம். சிங்கப்பூர் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், நமது 50-வது ராக்கெட் மூலமாக அந்நாட்டின் செயற் கைக்கோள்களை விண்ணில் ஏவியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு’’ என்றார்.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் பி.குன்னி கிருஷ்ணன், திருவனந்தபுரம் விக்ரம்சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் சிவன் உள்ளிட்டோரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவை பூமி ஆராய்ச்சி, சுற்றுச் சூழல், பேரிடர் கண்காணிப்பு, கடலோர கண்காணிப்பு, நகர திட்டமிடல், உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய பணிகளுக்குப் பயன்படும்.

இந்த ஆண்டு பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் 14 செயற்கைக்கோள்கள் வெற்றி கரமாக ஏவியிருக்கிறது இஸ்ரோ. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட் பத்தில் தயாரான கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் இயங்கும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை 2-வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட்டை ஆப், ஆன் செய்து சாதனை

வழக்கமாக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு ராக்கெட்டின் செயல்பாடு கண்டுகொள்ளப்படுவது இல்லை. ஆனால், பரிட்சார்த்த முறையில் நேற்று ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்டை, செயற்கைகோள்களை நிலைநிறுத்திய பிறகு ஆப் செய்து மீண்டும் ஆன் செய்து பார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.அதன்படி, ராக்கெட்டின் 4-வது நிலை எரிபொருள் செயல்பாடு முடிந்ததும் (ஏவப்பட்ட 17 நிமிடம் 25 வினாடியில்) அது ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகு 67 நிமிடம் 25 வினாடியில் ராக்கெட் மீண்டும் வெற்றிகரமாக ஆன் செய்யப்பட்டது. 4 விநாடிக்கு பிறகு அதை ஆப் செய்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x