

கரோனாவுக்கு எதிராக ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கையில் அமெரி்க்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகப்படுத்தப்படும் என நிதிஆயோக்கின் சுகாதாரக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்தார்.
நிதிஆயோக்கின் சுகாதாரக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 43 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டனர், 45 வயதுக்கு மேற்பட்டவ்ரகளில் 37 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை கணக்கிட்டால், அமெரி்க்காவை இந்தியா முந்திவிட்டது. அமெரி்க்காவில்ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 16.9 கோடியாக இருக்கும்நிலையில் இந்தியாவில் 17.2 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திவி்ட்டனர்.
தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகப்படுத்தப்படும், அடுத்துவரும் நாட்களில் இன்னும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்துவார்கள்.
கரோனா 2-வது அலை இந்தியாவில் குறைந்து வருகிறது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 245 பேர் கரோனாவில் உயிரிழக்கின்றனர் , உலக சராசரியில் இது 477 ஆக இருக்கிறது.
கரோனா வைரஸ் தொற்று குறைந்தபின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், அதன்பின்பும் மக்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தலை கைவிடக்கூடாது.
வைரஸ் பயணிக்க கடினமான பாதையை நாம் உருவாக்க வேண்டும். இதை நாம் மாற்றி அமைக்கும் போது சூழல் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
கரோனா பாதிப்பின் உச்சம் குறைந்துவிட்டது, கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று எண்ணி கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் செய்த செயல்களை செய்தால், 3-வது அலையை நாம் விரைவாக எதி்ர்பார்க்க வேண்டியது இருக்கும்.
தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், கரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி வேகம் எதிலும் சுணக்கம் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால், சூழல் மேலும் கடினமானதாக மாறிவிடும். இன்னும் நாம் கரோனாவிலிருந்து விடுபடவில்லை, பயணம் கடினமாகத்தான் இருக்கிறது, ஆதலால், பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு பால் தெரிவித்தார்.