

கேரளாவில் 2-வது முறையாக ஆட்சியி்ல் அமர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.
புதிய நிதியமைச்சர் பாலகோபால் அறிவிப்பின்படி, கரோனாவிலிருந்து மீள ரூ.20 ஆயிரம் கோடி நிதி, இலவசத் தடுப்பூசிக்கு ரூ.1500 கோடி, கடலோரப் பகுதி கட்டமைப்பை வலுப்படுத்துதல், வறுமை ஒழிப்பு எனப் பல திட்டங்களை உள்ளடக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த பட்ஜெட்டை வளர்ச்சிக்கு எதிரான பட்ஜெட் என்று காங்கிரஸ் கட்சியும், வேதனையளிக்கும் பட்ஜெட் என்று பாஜகவும் விமர்சித்துள்ளன.
கேரள நிதியமைச்சர், முதல் முறை எம்எல்ஏவான கே.என்.பாலகோபால் தனது முதல் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அவர் பேசியதாவது:
''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசு, மக்களுக்கு சுகாதாரம் முக்கியம், அனைவருக்கும் சுகாதாரம் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட்டை வடிவமைத்துள்ளது. கேரளாவில் சுகாதார அவசர நிலையைச் சமாளிக்க 6 கட்ட திட்டம், 3-வது அலையைச் சமாளிப்பது தொடர்பாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கரோனா 2-வது அலையில் ஏற்பட்ட சுகாதார ரீதியான, சமூக ரீதியான, பொருளதார ரீதியான பாதிப்புகளைச் சமாளிக்கவும், அதிலிருந்து மீண்டு வரவும் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.2,800 கோடி சுகாதார அவசர நிலைக்கும், ரூ.8,900 கோடி கரோனா 2-வது அலையில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வழங்கவும், ரூ.8,300 கோடி கடன் மற்றும் வட்டி தள்ளுபடி வழங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மேம்பட்ட வைராலஜி நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 18 முதல் 44 வயதுள்ள பிரிவினருக்கு இலவசத் தடுப்பூசி செலுத்த ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது அலையைச் சமாளிக்கும் பொருட்டு,ரூ.636.50 கோடியில் தனிமைப்படுத்தும் வார்டுகளும், 10 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் அரங்குகள், அனைத்து தாலுக்கா, மாவட்டங்கள், அரசு மருத்துவமனைகளில் உருவாக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 மருத்துவக் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் உருவாக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்காக, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வருவாயில் பிரதான பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.30 கோடி, மீனவ சமுதாயத்தினர் வசிக்கும் கடலோரப் பகுதிகளைப் பராமரிக்கவும், மேம்படுத்தவும், புதிய கட்டமைப்பை உருவாக்கவும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா 2-வது அலையில் கேரளாவில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்த கேரள மக்கள் 14.32 லட்சம் பேர் மாநிலத்துக்குத் திரும்பி வந்துவிட்டனர். அவர்களின் நலத்திட்டங்களுக்காகவும், தொழில் முன்னேற்றத்துக்குக் கடன் வழங்கவும் ரூ.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு பாலகோபால் தெரிவித்தார்.