

வரும் மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை தேர்வு செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலவாசிகள் இதை முகநூலில் செய்து வைராலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் பேசப்பட்டதாக மேற்கு வங்க மாநிலம் அமைந்தது. இதற்கு அங்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் மம்தாவிற்கு பாஜக பெரும் சவாலாக இருந்தது காரணம்.
இதில், பிரச்சாரம் செய்த பாஜகவின் அனைத்து தேசியத் தலைவர்களையும் மம்தா, ஒரு தனிப்பெண் தலைவராக இருந்து வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்தர மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களின் கருத்துக்களுக்கு ஆவேசமாக அளிக்கும் பதிலடியும் பிரபலமடைந்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால், முதல்வர் மம்தாவை அடுத்த பிரதமராக்க வேண்டும் என பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடங்கிய மேற்கு வங்க மாநிலவாசிகள் மம்தாவை ’அக்னி கன்னி’ எனவும் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக எனத் தனியாகத் துவக்கப்பட்டுள்ள முகநூலில் ’வாருங்கள்...மாற்றத்தை உருவாக்குவோம்...அடுத்த முறை ஒரு வங்காளியை பிரதமராக்குவோம்’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த முகநூல் பக்கத்திற்கு மம்தாவின் கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸினர் அந்த முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்தில், ‘‘இதுவரையும் குடியரசு தலைவர் பதவிக்கு மட்டும் ஒரு வங்காளி தேர்வு செய்யப்பட்டாரே தவிர பிரதமராக எவரும் வரவில்லை.
எனவே, மம்தாவை பிரதமராக்குவதில் என்ன தவறு? இந்த வாய்ப்பை முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தவற விட்டு செய்த தவறை மம்தா செய்து விடக் கூடாது.’ ’எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மம்தா தான் பாஜகவின் செல்வாக்கை முடித்து வைக்க, டெல்லிக்கு செல்லத் தயங்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.