

தற்போதுள்ள சூழலில் நாட்டில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்க முடியாது. கடந்த மாதம் 12ஆம் தேதி கோவாக்சின் நிறுவனத்துக்கு 2 முதல் 18 வயதுக்குள்ளான பிரிவினருக்குத் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், செய்முறைத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கிய பின்புதான் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஜோதி அகர்வால் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து கடந்த 1-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு வராததையடுத்து, ஜூலை 16-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் மத்திய அரசு தனது பதிலை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்தது. அதில், “ கடந்த மே 12-ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து 2 வயது முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்குத் தடுப்பூசியைச் செலுத்தி கிளினிக்கல் பரிசோதனை செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு அனுமதி அளித்துள்ளது.
தற்போது செலுத்தப்பட்டுவரும் கோவாக்சின் மருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அவசரத் தேவைக்குச் செலுத்திக்கொள்ள மட்டுமே இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்யவில்லை. மேலும் 3 கிளினிக்கல் பரிசோதனையும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆதலால், தற்போதுள்ள சூழலில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.