

பஞ்சாப் மாநில அரசு ஏழை மக்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை தலா ரூ. 1000 -க்கு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
தனியார் மருத்துவமனைகள், மாநிலஅரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் தடுப்பூசி வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
இந்தநிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை பற்றி ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும். தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்களுக்கான தடுப்பூசி அளவை அதிகரிக்க முடியாமல் இருக்கிறார்கள்.
தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ராகுல் காந்தி மட்டுமல்ல, மத்திய அரசும் தொடர்ந்து தொடக்கத்தில் இருந்தே மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதனால்தான் இந்தியாவில் இரு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன.
கோவாக்சின் தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆனால். இந்தத் தடுப்பூசி குறித்துப் பல சந்தேகங்களையும், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் காங்கிரஸ் தலைவர்கள் எழுப்புகிறார்கள்
பஞ்சாப் அரசுக்கு 1.40 லட்சம் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 400 ரூபாய் வாங்கிய கோவாக்சின் தடுப்பூசிகளை 20 தனியார் மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ. 1000 என்ற விலையில் விற்பனை செய்துள்ளது.
ராகுல் காந்தி முதலில் மற்றவர்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்துவதை விட்டு தனது கட்சியை கவனிக்கட்டும். தடுப்பூசி பற்றியும் அதன் விலை பற்றியும் தினந்தினம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் ராகுல் காந்தி இதற்கு என்ன சொல்லப்போகிறார்.
அவரது கட்சி ஆட்சி நடத்தும் பஞ்சாப் மாநில அரசு ஏழை மக்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை தலா ரூ. 1000 -க்கு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்துள்ளதை ஏற்றுக் கொள்கிறாரா.
அந்த மருத்துவனைக்கு சென்றவர்கள் அந்த மருத்துவமனைகளில் அதை விட கூடுதல் தொகையை செலுத்தி கோவக்சின் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார்கள்.
கோவாக்சின் தடுப்பூசியை பணம் கொழிக்கும் பொருளாக மாற்றியது காங்கிரஸ் ஆளும் அரசு தானே. இதற்கு ராகுல் காந்தி முதலில் பதில் சொல்லட்டும்’’ எனக் கூறியுள்ளார்.