

இந்திய மொழிகளில் அசிங்கமான மொழி கன்னடம் என்று கூகுள் தேடுபொறியில் தோன்றிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்தியாவிலேயே அழகற்ற அசிங்கமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுள் தேடுபொறியில் தேடினால் கன்னடம் என காட்டியது.
இதனால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கொதிப்பு அடைந்தனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பண்பாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி கூறியதாவது:
கூகுள் நிறுவனம் கன்னட மொழியை இழிவு படுத்தி உள்ளது. கன்னட மொழி 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது. இது கர்நாடக மாநிலத்திற்கும் அதைச் சேர்ந்தவர்களுக்கும் பெருமையான விஷயமாக உள்ளது. கன்னட மொழியை சிறுமை படுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
அசிங்கமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறோம் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. கன்னட மொழி அசிங்கமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இச்சம்பவத்திற்காக கூகுள் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்னையையும் உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’' எனக் கூறியுள்ளார்.
கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடுபொறியில் தவறாக வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.