

யோகா குரு பாபா ராம்தேவின் கருத்துக்கு எதிரான மனு விவகாரத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மருத்துவ சங்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுகொண்டது.
கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், ஆங்கில (அலோபதி) மருத்துவம் காரணமாக லட்சக் கணக்கான கரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என கூறியிருந்தார்.
மேலும் அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்றும் அவர் பேசுவது போன்ற வீடியோசமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது இந்தகருத்துக்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லி மருத்துவ சங்கம் (டிஎம்ஏ) சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுநேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎம்ஏ சார்பில், “அலோபதி மருத்துவம் போலியானது என்ற ராம்தேவின் கருத்து எங்கள் சங்க உறுப்பினர்களை பாதிக்கிறது. மேற்கொண்டு இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கஅவருக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் தனது கருத்துக்காக மன்னிப்பு கோருமாறும் ரூ.1அடையாள அபராதம் செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் கரோனா நோயை குணப்படுத்துவதாகக் கூறி கரோனில் என்ற மருந்தை ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த மருந்து குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என அரசு கூறிய நிலையிலும், ரூ.250 கோடிக்கு இந்த மருந்தை விற்பனை செய்துள்ளது பதஞ்சலி. இதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “நாளை, நானே ஹோமியோபதி மருத்துவம் போலியானது என கருதலாம். அது ஒருவருடைய கருத்து. இதற்கு எதிராக எப்படி வழக்கு தொடுக்க முடியும். அவரது கருத்து தவறு என கருதினாலும், அதை எதிர்த்து பொதுமக்கள் நலன் என்ற பெயரில் வழக்கு தொடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் பொதுநல வழக்காக பதிவு செய்ய வேண்டும்.
ராம்தேவுக்கு நோட்டீஸ்
பதஞ்சலி விதிகளை மீறினால், அதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள். இது தொடர்பாக பொதுநல வழக்கு பதிவு செய்யுங்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் நேரத்தைவீணடிப்பதற்கு பதில் கரோனாநோயாளிகளை குணப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
இந்த விவகாரத்தில் எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய ராம்தேவ் தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை வரும்ஜூலை 13-ம் தேதி நடைபெறும்” என்றனர்.- பிடிஐ