

அமெரிக்காவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பீட்டா அமைப்பின் செயல்பாடுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை அமுல் நிறுவனத் துணைத் தலைவர் வலம்ஜி ஹம்பால் வலியுறுத்தியுள்ளார். விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்தலை தடுக்கும் அமைப்பாகபீட்டா தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
10 கோடி ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான நடவடிக்கையை தங்களது பிரசாரம் மூலம் பீட்டா அமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாடுகளிடமிருந்து பெறப்படும் பாலுக்குப் பதிலாக தாவர வித்துகள் மூலம் பெறப்படும் பாலை பயன்படுத்த வேண்டும் என்று பீட்டா அமைப்பு அமுல் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.
இது பால் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நிலமில்லாத 10 கோடிஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நிறுவனத்தின் தலைவர் ஆர்எஸ் சோதி பீட்டா அமைப்பினருக்கு தனது ட்விட்டர் பதிவு மூலம் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இத்தகைய பிரசாரம் மேற்கொண்டுள்ள பீட்டா அமைப்பின் செயல்பாடுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று அமுல் நிறுவனத் துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் சார்ந்த டெய்ரி துறையின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. இதுபோன்ற பிரச்சாரம் இத்துறை மீது தவறான பார்வையை ஏற்படுத்திவிடும். இவர்களின் செயல்பாடுகளில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவில் பால் உற்பத்தியாளர்களை வேலையிழப்புக்கு உள்ளாக்கும் நோக்கமே இதில் இருப்பதாகத் தெரிகிறது என்றும் ஹம்பால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாவர வித்துகளின் மூலம் பெறப்படும் பால் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களது செயல்பாடுஉள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத்தில் செயல்படும் கூட்டுறவு அமைப்பான அமுல் நிறுவனத்தில் 10 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தவிர நிறுவனத்துடன் தொடர்புடைய 15 லட்சம் பேரும் பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதை பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்தார்.