

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் ஜூனில் கான்பூரின் பிக்ரு கிராமத்தில் குற்றவாளி விகாஸ் துபேவை கைது செய்ய சென்ற போலீஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர் உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டு வீழ்த்தி விட்டு குற்றவாளி துபே தப்பியிருந்தார். ஒரு மாதத்துக்குள் அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இதையடுத்து தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் நேற்று முன்தினம் இரவு கான்பூரின் சவுபஸ்தா காவல் நிலையப் பகுதியில் கான்பூர் மாவட்ட தெற்கு பகுதி பாஜக தலைவர் நாரயண் சிங் பதோரியா தன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இருந்த மனோஜ் சிங் என்பவரும் கலந்து கொண்டார்.
இதை அறிந்த கான்பூர் போலீஸார், மனோஜ் சிங்கை பிடிப்பதற்கு பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் சாதாரண உடைகளில் மறைந்திருந்தனர். அப்போது, போலீஸாரால் கைது செய்யப்பட்ட மனோஜ் சிங், தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதை கேட்டு அங்கு வந்த அவரது ஆதரவாளர்கள் போலீஸ் ஜீப்பிலிருந்து மனோஜ் சிங்கை இழுத்து கீழே இறக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து காவல் துறையின் துணை ஆணையர் ரவீணா தியாகி கூறும்போது, ‘கிரிமினல் குற்றவாளியை தப்ப விட்ட வழக்கில் நாராயண்சிங் உள்ளிட்ட 9 பேர் மற்றும் பெயர் தெரியாத ஒருவர் என 10 பேர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது. அனுமதியின்றி விழாவை நடத்தியதாக தொற்று வழக்குகளும் சேர்த்துள்ளோம். இந்த இருவருக்குள் உள்ள தொடர்பையும் விசாரித்து வருகி றோம்’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, நாராயண் சிங் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள் ளார். இந்த சம்பவத்தை விசாரிக்க 3 பேர் குழுவையும் கான்பூர் மாவட்ட பாஜக அமைத்துள்ளது. மனோஜ்சிங் மீது கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.