

கேரள தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி மார்க்சிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணிக்கு 41 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த 2016 தேர்தலில் நேமம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக.வால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், ஜனாதிபத்ய ராஷ்டிரிய கட்சி நடத்தி வரும் பழங்குடியின தலைவர்களில். முக்கியமானவரான சி.கே.ஜானு கேரளா முழுவதும் பிரபலமானவர். மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த ஜானு, 2016-ல் தனிக்கட்சி தொடங்கினார்.
அதன்பின், பாஜகவுடன் நல்லுறவில் இருந்தார். 2018-ல்பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த பாஜகவின் விஜய யாத்திரை யின் போது மீண்டும் பாஜக கூட்டணியில் சங்கமித்தார்.
இந்நிலையில் சி.கே.ஜானுவுடன் கருத்து முரண்பாட்டில் இருக்கும் அவரது கட்சியின் பொருளாளர் பிரசீதா, “ஜானுவை பாஜக தனது கூட்டணிக்குள் சேர்க்க ரூ.10 லட்சம் கொடுத்தது” என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தொலைபேசி உரையாடல் ஒன்றையும் பிரசீதா வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் ஒரு பெண்ணிடம், ஆண் ஒருவர் பேசுகிறார். அந்த உரையாடலில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் பேசியதாக பிரசீதா குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த உரையாடலில், “ஒருவரிடம் ஜானு கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பி செலுத்தாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய முடியாது. அதற்கு அவருக்கு 10 லட்சம் ரூபாய் தேவை” என்று பெண் சொல்கிறார். அதற்கு, அந்த ஆண் குரல், "ஏழாம் தேதி கூட்டத்திற்கு வரும்போது வாங்கிக் கொள்ளுங்கள்" என்கிறது.
இதுதொடர்பாக சி.கே.ஜானு கூறும்போது, “இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். சுரேந்திரனிடமிருந்து பணம் பெற எனக்கு இடைத்தரகர் தேவையில்லை. நான் அமித் ஷாவையே தொடர்பு கொள்ள முடியும் போது இடையில் யார் தேவை?” என்றார்.
சுரேந்திரன் கூறும்போது, “என்னையும் பழங்குடிகளுக்காக வேலை செய்த சமூகசேவகரையும் அவமதிக்கிறீர்கள். . ஜானு என்னிடம் பணம் தொடர்பாக பேசவும் இல்லை. நான் அவருக்கு பணம் கொடுக்கவும் இல்லை” என மறுப்பு தெரிவித்துள்ளார்.