டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல்: 13 ஆண்டுகள் தலைவராக இருந்த அருண் ஜேட்லி மீது ஆம் ஆத்மி புகார்

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல்: 13 ஆண்டுகள் தலைவராக இருந்த அருண் ஜேட்லி மீது ஆம் ஆத்மி புகார்
Updated on
2 min read

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக அருண் ஜேட்லி இருந்த 13 ஆண்டு காலத்தில், பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளனர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கூறும்போது, “டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடந்தது குறித்து ஆம் ஆத்மி அரசு விசாரித்து வந்தது. இதில் சங்க ஊழல் தொடர்பான கோப்புகளை எடுத்துச் செல்லவே சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றனர்.

இந்நிலையில், டிடிசிஏ ஊழல் குறித்த விசாரணை அறிக்கை யுடன், ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜேட்லி 13 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். அப்போது கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக அணி தேர்வின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தவிர போலி நிறுவனங்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜேட்லி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து நியாயமான நேர்மையான விசாரணை நடை பெற, அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்யும்படி ஜேட்லியிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறவேண் டும். டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தை புன ரமைக்க ரூ.24 கோடி ஒதுக்கப்பட் டது. ஆனால், கூடுதலாக ரூ.90 கோடி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் எங்கு போனது?

ஒரே பெயரில் ஒரே முகவரியில் ஒரே இயக்குநர் பெயரில் உள்ள 5 நிறுவனங்களுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. செய்யாத வேலைக்கு அந்த நிறுவனங்களுக்கு பணம் கொடுத்ததாக போலியாக கணக்கு காட்டி உள்ளனர்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைப்பதற்கும், டிடிசிஏ ஊழல் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்லவுமே தலைமை செயலகத்தில் திடீரென சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்களுக்கு மட்டுமல்லாமல், அவருடைய கட்சித் தலைவர்களுக்கும் ஜேட்லி பதில் அளிக்க வேண்டும். பதில் சொல்வதுடன் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆம் ஆத்மி தலைவர்கள் கூறினர்.

ஜேபிசி விசாரணை

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “டிடிசிஏ-வில் நிதி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந் துள்ளது. இதுதொடர்பாக நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் ஜேட்லி அமைச்சராக இருந்தால் விசாரணை நேர்மையாக இருக் காது. எனவே, விசாரணை முடியும் வரை அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் என்ன தொடர்பு என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிலர் உள்ளூர் பிரச்சினையை எழுப்பி சர்ச்சையை கிளப்புகின்றனர். இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலகமாட்டார் - எம்.வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்

டிடிசிஏ மீது சில புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். டிடிசிஏ-வில் தவறு நடக்கவில்லை. அருண் ஜேட்லி மீதான புகாரில் உண்மை இல்லை - சேதன் சவுகான், டிடிசிஏ செயல் தலைவர்

டிடிசிஏ-வில் முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பொய் பிரச்சாரம் செய்கிறார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தனது செயலாளர் மீதான ஊழல் புகாரை மறைப்பதற்காகவும் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் கேஜ்ரிவால் இந்தப் புகாரைக் கூறுகிறார் - அருண் ஜேட்லி, மத்திய நிதி அமைச்சர்

அருண் ஜேட்லி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in